இத்தாலியில் கடந்த மார்ச் 19-ம் தேதிக்குப்பின் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை முதல்முறையாகக் குறைந்துள்ளது. அங்கு நேற்று 525 பேர் கரோனா வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர்
கடந்த 2 வாரங்களுக்கு முன் மார்ச் 19-ம் தேதி மிகக்குறைவாக 427 பேர் உயிரிழந்திருதார்கள். அதன்பின் நேற்று உயிரிழப்பு குறைந்துள்ளது.
கரோனா வைரஸின் இரக்கமற்ற தாக்குதலில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரதானமானது இத்தாலி. இங்கு கரோனா வைரஸ் 15 ஆயிரத்து 887 உயிர்களை காவுவாங்கியுள்ளது. 1.29 லட்சம் மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அங்கு இதுவரை 21 ஆயிரத்து 815 பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனார்கள். கடந்த சில நாட்களாக உயிரிழப்பு குறைவு, பாதிப்பு குறைவு, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை அந்த நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் துளிர்விடச் செய்துள்ளது
கடந்த சனிக்கிழமை முதல் உயிரிழப்புகள் வீதம் 23 சதவீதம் இத்தாலியில் குறைந்துள்ளது.
இதுகுறித்து இத்தாலியின் தேசிய சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் சில்வியோ புராசாபேரோ நிருபர்களிடம் கூறுகையில், “ இத்தாலியில் கடந்த சில நாட்களா உயிரிழப்புகள் வீதம் குறைந்து வருவது கரோனா வைரஸின் தாக்கத்தை குறிக்கும் வளைவு கோடு சாயத்தொடங்குவதைக் குறிக்கிறது.
தொடர்ந்து இதுபோல் இறப்புகள் வரும் நாட்களில் குறைந்து வந்தால், ஊரடங்கை தளர்த்தும் அடுக்கட்ட நடவடிக்கையை பற்றி சிந்திக்கத் தொடங்குவோம்” எனத் தெரிவித்தார்
இத்தாலியில் உள்ள 22 மண்டலங்களில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வருவது நேற்று முதல்முறையாக் குறையத்த தொடங்கியது. சனிக்கிழமை 29,010 நோயாளிகள் வந்த நிலையில், நேற்று 28,949 ஆகக் குறைந்தது. மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணி்கையும் 3,994லிருந்து 3,977 பேராகக் குறைந்துள்ளது.
ஆனால், கரோனா வைரஸ் இத்தாலியின் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. மிகப்பெரிய நிறுவனமான கான்பின் இன்டஸ்ட்ரியா இந்த ஆண்ட தனது உற்பத்தி 6 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது