"இலங்கையில் 13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும். அத்துடன் போர் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க குழு அளித்துள்ள பரிந்துரைகளையும் உடனடியாக செயல்படுத்த வேண்டும்" என்று இலங்கையின் நவ சமா சமாஜ் கட்சி பொதுச் செயலாளர் விக்ரமபாஹு கருணா ரத்னே வலியுறுத்தி உள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனேவும் ஒர் ஒப்பந்தம் மேற்கொண்டனர். இலங்கையில் தமிழர்களுக்கு சம அரசியல் உரிமைகள் அளிக்க 13-வது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்தச் சட்ட திருத்தம் அமல்படுத் தப்படவில்லை. இந்நிலையில், இலங்கை இடதுசாரி கட்சியான நவ சமா சமாஜ் கட்சி பொதுச் செயலாளர் விக்ரமபாஹு கருணாரத்னே, தனது கட்சி அலுவலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:
இலங்கையில் புதிதாக பொறுப் பேற்றுள்ள அரசு, 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், புலிகள் - ராணுவம் ஆகிய வற்றுக்கு இடையிலான போர் முடிவுக்கு வந்த பிறகு அமைக்கப் பட்ட, ‘போர் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க குழு’ அளித் துள்ள பரிந்துரைகளை உடனடி யாக செயல்படுத்த வேண்டும். அத்துடன் முக்கியமாக போர் குற்றங்கள் குறித்து உள்நாட்டி லேயே நம்பத்தகுந்த வகையிலும் சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் உண்மை யாக விசாரணை நடத்த வேண்டும்.
இதை செய்வதற்கு தேவை யான வசதிகளும், அதிகாரிகளும் இலங்கையில் உள்ளனர். இதற் கான நடவடிக்கைகள் எடுக்கப்பட் டால், தமிழர்களின் பிரச்சினை யைத் தீர்ப்பதற்கான தொடக்கமாக இருக்கும். 13-வது சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படும் என்று சொன்னால், மாகாண அரசு களுக்கு போலீஸ் அதிகாரம் மற்றும் நில நிர்வாக அதிகாரம் போன்ற விஷயங்களில் அதிகார பரவலாக்கமும் அடங்கும் என்பதுதான் பொருள்.
இவ்வாறு கருணாரத்னே கூறினார்.
‘‘இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்க முடியுமா?’’ என்று செய்தியாளர் கேட்டதற்கு, ‘‘ஏன் முடியாது’’ என்று அவர் பதில் அளித்தார். இதுகுறித்து கருணாரத்னே மேலும் கூறுகையில், ‘‘இலங்கையில் கடந்த 2010-ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் ‘கிரேட்டர் கொழும்பு’ என்பது பற்றி பேசினார். அப்படி இருக்கும் போது, பொது அடிப்படையில் வடக்கு - கிழக்கு பகுதிகளை ஏன் இணைக்க முடியாது’’ என்று கேள்வி எழுப் பினார்.
கருணாரத்னே மேலும் கூறும்போது, ‘‘மலைதோட்ட பயிர்கள் விளையும் ஒவ்வொரு பகுதியையும் நகராட்சி அமைப் பாக மாற்ற வேண்டும். தற்போது கிராம அளவில் உள்ள நிர்வாகத் துக்கு எந்த அதிகாரமும் இல்லை. (மலை தோட்டங்களில்தான் ஏராள மான தமிழர்கள் வசிக்கின்றனர் அல்லது வேலை செய்கின்றனர்.) கூட்டாட்சி தத்துவத்துக்கு இந்தியா வையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அங்கு மாநிலங் களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுபோல், இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அதேசமயம் ஒரே நாடு என்ற அமைப்பின் கீழ் அவற்றை கொண்டு வரவேண்டும்’’ என்றார்.