ஜெர்மனியில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 90,000 - ஐ கடந்துள்ளது.
இதுகுறித்து ஜெர்மனியின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ஜெர்மனியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90,000 - ஐ கடந்துள்ளது. சனிக்கிழமை மட்டும் சுமார் 5,600 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 147 பேர் பலியாகி உள்ளனர்.
ஜெர்மனியில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றுக்கு 1,444 பேர் பலியாகி உள்ளனர். 26,000க்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வந்தாலும் நோயாளிகளின் உயிரிழப்பை ஜெர்மனி வெற்றிக்கரமாக தடுத்து வருகிறது. மேலும் அந்நாட்டைச் சேர்ந்த இளம் மருத்துவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து தாய் நாடு திரும்பி சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜெர்மனியில் இவ்வாறு இருக்க, ஐரோப்பிய நாடான இத்தாலியில் 124,632 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அந்த நாட்டில் இதுவரை 15,362 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் 126,168 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,947 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் 89,953 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.7,560 பேர் இறந்துள்ளனர்.
முன்னதாக, சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 190 நாடுகளில் நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 64,734 பேர் பலியாகினர்.
கரோனா வைரஸுக்கு அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.