கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க ஏப்ரல் 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை விமான சேவை நிறுத்தப்படுவதாக இலங்கையின் விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸுக்கு இதுவரை உலக அளவில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
கரோனா வைரஸின் தீவிரம் அதிகமாக உள்ளதால் அவ்வைரஸைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. மேலும், பிற நாடுகளுக்கான விமான சேவையும் ரத்து செய்துள்ளன.
அந்த வகையில் இலங்கையின் விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏப்ரல் 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தற்காலிகமாக விமான சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்தத் தடையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அடங்கும். எனினும் தேவை கருதி சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 148 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியானார்.