அமெரிக்காவின் மிகப்பெரிய தொற்று நோய் மருத்துவ நிபுணரும் கரோனா தொற்று நோய் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ஆண்டனி ஃபாஸிக்கு கொலை மிரட்டல்க பலவேறு விதங்களில் வருவதால் அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கரோனாவுக்கு அமெரிக்காவில் 1 லட்சம் முதல் 2,40,000 பேர்கள் வரை பலியாகும் அபாயம் இருக்கிறது, மேஜிக் புல்லட் இல்லை, மேஜிக் வாக்சைன் இல்லை சமூக விலக்கலே ஒரே வழி, நம் நடத்தையின் மூலம், சுயக் கட்டுப்பாட்டின் மூலம்தான் கரோனாவிலிருந்து மீள முடியும் என்று வெள்ளை மாளிகையில் அவர் அனறு அறிவித்தார்.
அவருக்கு வரும் மிரட்டல்களின் தன்மை என்னவென்று கணிக்கப்பட முடியவில்லை என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தாலும் அவருக்குப் பாராட்டுகளும் அதிகமாகி வருகின்றன.
டாக்டர் ஃபாஸி மீது வலதுசாரிகள் பிளாக்கர்கள் ஆகியோர் எதிப்புத் தெரிவித்து எழுதி வருகின்றனர். ட்ரம்ப் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் அதற்கு இடையூறாக டாக்டர் ஃபாஸிதான் இருக்கிறார் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். சிலர் டாக்டர் ஃபாஸியின் நிபுணத்துவத்தையே கேள்வி எழுப்பி நிலைத்தகவல் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் ஆன்லைனில் விஷம் கக்கும் எழுத்துக்கள் இவரை விமர்சித்து வெளி வந்து கொண்டிருக்கின்றன. இதனால் இவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, கோவிட்-19க்கு வாக்சைன் இரண்டுமாதங்களில் தயாராகி விடும் என்று அதிபர் ட்ரம்ப் கூறிய போது டாக்டர் ஃபாஸி அவரைத் திருத்தி குறைந்தது ஒன்றரை ஆண்டு ஆகும் என்றார்.
ஆனால் இவரது புகழும் தற்போது அதிபர் ட்ரம்பையும் தாண்டி பரவி வருகிறது, காரணம் டாக்டர் ஃபாசியின் வெளிப்படையான பேச்சும் விஞ்ஞானத் தகவல்களுமே, சமயத்தில் வெள்ளை மாளிகை கூட்டத்தில் டாக்டர் ஃபாஸி இல்லை என்றால் பலரும் ட்விட்டரை எடுத்து ‘எங்கே டாக்டர் ஃபாஸி?’ என்று கேட்கத் தொடங்குவதோடு இவரை ட்ரம்ப் ஒதுக்குகிறார் என்ற விமர்சனங்களும் அங்கு எழுந்து வருகிறது.