உலகம்

கருணை காட்டாத கரோனா: அமெரிக்காவில் 6 வார பச்சிளங் குழந்தை பலி: மனதை உருக்குலைப்பதாக மருத்துவர்கள் வேதனை; மிகஇளம் வயது உயரிழப்பு

பிடிஐ

அமெரிக்காவில் இதுவரையில்லாத வகையில் கரோனா வைரஸுக்கு 6 வார பச்சிளம் பெண் குழந்தை பலியானது அங்குள்ள மக்களையும், மருத்துவர்களையும் உலுக்கி எடுத்துள்ளது.

இந்த வைரஸால் யாருமே பாதுகாப்பாக இருக்க முடியவில்லை, பச்சிளங்குழந்தைக்கு கூட இரக்கம்காட்டாத கரோனா வைரஸ் என்று கனெக்டிகட் ஆளுநர் நெட் லாமென்ட் உருக்கமாகத் ெதரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில்தான் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து ஹார்ட்போர் கோரன்ட் நாளேட்டி்ல அதிகாரிகள் அளித்த பேட்டியில், “ கனெக்டிகட் நகரில் உள்ள மருத்துவமனைக்கு 6 வார பச்சிளங்குழந்தை கரோனா வைரஸ் நோய் தொற்றுடன் கொண்டுவந்தனர். அந்த குழந்தையை பரிசோசித்தபோது கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு சிகிிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், இரக்கம் காட்டாத கரோனாவுக்கு அந்த குழந்தை சில மணிநேரத்தி்ல் பலியானது.

கனெக்டிகட் மாநிலத்தில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலேயே கரோனாவுக்கு மிக இளம் வயதில் பலியான குழந்தையாகும். இதற்கு முன் 35 வயது மதிக்கத்தக்க நபர் பலியானதுதான் மிகக்குறைந்த வயதாக இருந்தது. இந்த வைரஸால் யாருமே பாதுகாப்பாக இருக்க முடியவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது

கனெக்டிகட் ஆளுநர் நெட் லாமென்ட் ட்விட்டரில் கூறுகையில், “ கனெக்டிகட் மாநிலத்தின் ஹார்ட்போர்ட் பகுதியைச் சேர்ந்த 6 வார பச்சிளங்குழந்தையின் உயிரை கரோனா வைரஸ் குடித்துள்ளது. மருத்துவமனைக்கு மோசமான நிலைமையில் அந்த குழந்தையைக் கொண்டுவந்ததால் மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இந்த குழந்தையின் இறப்புக்கு மருத்துவர்கள் பெரும் வேதனை தெரிவித்துள்ளனர். கனெக்டிகட் மாநில மக்கள் அனைவரையும் பச்சிளங்குழந்தையின் மரணம் மனதை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அந்த குழந்தை இறந்த செய்தி என் மனதை சுக்குநூறாக உடைப்பதாக இருந்தது. அமெரிக்காவில் மட்டுமல்ல உலகளவில் கரோனா வைரஸுக்கு இளவயதில் பலியான குழந்தை இதுவாகத்தான் இருக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்

கனெக்டிகட் மாநிலத்தில் 3,557 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், இதுவரை 85 பேர்உயிரிழந்துள்ளனர். 766 நோயாளிகள் கரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT