அமெரிக்காவில் இனி வரும் அடுத்த இரு வாரங்கள் வலி நிறைந்தது என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு சுமார் 1,88,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 7 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து வீரியமிக்கதாக உள்ளது.
எனவே கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் எடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 30-ம் தேதி வரை அமெரிக்காவில் சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசும்போது, “கரோனா வைரஸின் தாக்கம் வலுவாக உள்ளது. அமெரிக்காவில் 1,75,000 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அடுத்து வரும் இரண்டு வாரங்கள் வலி நிறைந்தது” என்று அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 42 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.