இத்தாலியில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்ததுள்ளது.
இதுகுறித்து இத்தாலியின் நோய்த் தடுப்பு மையம் கூறும்போது, ''இத்தாலியில் கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை 1,01,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,591 பேர் பலியாகியுள்ளனர். 14,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இத்தாலியில் கரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் உண்மையான விவரம் தற்போதுள்ள எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் என்றும், இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இறப்பு எண்ணிக்கை இதில் கணக்கிடப்படவில்லை என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாலியில் பிப்ரவரி 21 ஆம் தேதி கரோனா வைரஸ் பாதிப்புக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. பள்ளிக்கூடம் முதல் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 தொற்று அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 37,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.