பிரேசில் தீவிர வலதுசாரி அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ கரோனா தொற்று, பரவல், அதன் மின்னல்வேகம் ஆகியவற்றை நம்புவதாக இல்லை, ஏற்கெனவே லாக்-டவு பற்றி அவர் கேள்வி எழுப்பி வாங்கிக் கட்டிக் கொண்டார், இது போதாதென்று ஞாயிறன்று 2 ட்வீட்களை தனிமைப்படுத்தல் பற்றி வெளியிட்டார், ஆனால் அது சமூகவலைத்தள விதிகளை மீறியிருப்பதாக ட்விட்டர் நிறுவனத்தினால் நீக்கப்பட்டு விட்டது.
பொதுச்சுகாதார தகவல்களை மறுக்கும் விதமாக மாற்றாக ட்விட்டரில் தவறான செய்திகளை வெளியிட்டால் அதனை நீக்க ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் இதன் மூலம் கோவிட்19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதோடு பரவவும் வாய்ப்புள்ளது.
நீக்கப்பட்ட அதிபரின் ட்விட்டர் வீடியோ ஒன்றில், “மக்கள் என்ன கூறுகிறார் என்றால் வேலைக்குச் செல்ல விரும்புகின்றனர், நாம் ஆரம்பத்திலேயே கூறி வருகிறோம் 65 வயதினர், கடந்தோர் மட்டும் வீட்டுக்குள் இருந்தால் போதும் என்று” என பேசியிருந்தார். மேலும், “நாம் சும்மா இருக்க முடியாது. கரோனாவினால் நீங்கள் இறக்கவில்லையெனில் வறுமையில் வாட வேண்டும் என்று ஒரு வியாபாரி அதிபரிடம் கேட்கிறார். அதற்கு போல்சொனாரோ, “நீங்கள் இறக்க மாட்டீர்கள்” என்கிறார்.
“இப்படியே போய்க்கொண்டிருந்தால் வேலையின்மை பெரிய அளவில் ஏற்பட்டு பெரிய பிரச்சினையில் கொண்டு போய் விட்டு சரி செய்ய பல ஆண்டுகள் பிடிக்கும். பிரேசில் நிற்க முடியாது, இல்லையெனில் நாம் வெனிசூலாவாகிவிடுவோம்” என்று இன்னொரு வீடியோவில் பேசியுள்ளார். மேலும் என்னை மக்கள் வாயை மூடிக் கொண்டு இருக்கக் கோருகிறார்கள், வைரஸை எதார்த்தத்துடன் எதிர்கொள்வோம், இது வாழ்க்கை, நாம் அனைவரும் ஒரு நாள் சாகத்தான் போகிறோம், என்று நிலைமையின் சூழல் புரியாமல் வீடியோ வெளியிட்டார், இந்த வீடியோக்களையும் ட்விட்டர் நீக்கி விட்டது.
பிரேசிலில் 3,904 பேர் கரோனாவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர், 114 பேர் மரணமடைந்துள்ளனர்.