பிரதிநிதித்துவப்படம் 
உலகம்

வறண்ட புற்களில் பரவும் தீயின் வேகம் போல் கரோனா: நியூயார்க் நகரில் மட்டும் உயிரிழப்பு ஆயிரத்தைக் கடந்தது; 16 நாட்களில் நடந்த சோகம்

பிடிஐ


அமெரிக்காவில் கரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரில் அந்த வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த பலி 16 நாட்களில் நடந்துள்ளது.

இதில் பெருமளவு உயிரிழப்புகள் அனைத்தும் கடந்த சில நாட்களில் நிகழ்ந்தவையாகும்.

நியூயார்க் நகர நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “ நியூயார்க் நகரி்ல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 776 பேர் கரோனா வைரஸுக்கு உயிரிழந்திருந்தார்கள், ஆனால், அடுத்த 24 மணிநேரத்தில் 250 ேபருக்கும் அதிகமாக கரோனா வைரஸுக்கு பலியாகி எண்ணிக்கை 1,026 ஆக அதிகரித்துவிட்டது. நியூயார்க் நகரிலும், புறநகரிலும் கரோனா வைரஸ் காட்டுத்தீ போல பரவி வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

நியூயார்க் நகரைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர் ஈரான் சென்று விட்டு கடந்த 1ம் தேதி நியூயார்க் திரும்பினார். இரு நாட்களுக்குப்பின் அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, அதன்பி்ன் புறநகரான நியூ ராசெலேவைச் சேர்ந்த வழக்கறிஞருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மார்ச் 10-ம் தேதி நியூ ராசெலே பகுதி முழுவதும் மூடப்பட்டு, பள்ளிகளுக்கும், கல்லூரரிகளுக்கும் விடமுறை அறிவித்து ஆளுநர் ஆன்ட்ரூ குமோ அறிவித்தார். அன்றைய தினமே நியூஜெர்ஸியின் யாங்கர்ஸ் பகுதியில் ஒருவர் உயிரிழந்தார்.

மார்ச் 12-ம்தேதி நிலைமை மோசமடைவைப் பார்த்த ஆளுநர், மாநிலத்தில் 500 பேருக்கு மேல் எங்கும் கூடுவதற்கு தடை விதித்தார், திரையரங்குகள், விளையாட்டு அரங்குகளுக்கு தடை விதித்தார். அடுத்த சில நாட்களில் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் பலியானார். இதுதான் நகரின் முதல் உயிரிழப்பாக இருந்தது.

நியூயார்க் நகரின் அனைத்துப் பள்ளிகளையும் 15-ம் தேதிவரை மூடுவதற்கு நகர மேயர் பில் டி பிளாசியோ உத்தரவிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். மார்ச் 20-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், அத்தியாவசியமில்லாத பணியாளர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், ஒருவரோடு ஒருவர் நிற்கும் போது 6 அடி இடைவெளி தேவை உள்பட பல கட்டுப்பாடுகளை விதித்தார்.அந்த நேரத்தில் நியூயார்க் நகரில் 35 பேர் மட்டுமே உயிரிழந்திருந்தார்கள்.

ஏற்க்குறைய அடுத்த 9 நாட்களில் நியூயார்க் நகரில் 950க்கும் மேற்பட்ட மக்கள் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார்கள். ஆயிரம் பேர் உயிரிழப்பை தொடுவதற்கு ஸ்பெயின் நாட்டுக்கு 18 நாட்களும், இத்தாலிக்கு 21 நாட்களும் தேவைப்பட்டது. ஆனால், நியூயார்க் நகரில் இது 16 நாட்களில் நடந்துள்ளது என அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கரோனா ஆய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது

SCROLL FOR NEXT