பாகிஸ்தானின் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில், பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் கர்னல் ஷுஜா கான்ஸாதா படுகொலை செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தற்கொலைப் படை தாக்குதலில் அமைச்சர் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் கர்னல் ஷுஜா கான்ஸாதா. இவரது வீடு அட்டோக் பகுதியில் உள்ளது. அங்குள்ள அலுவலகத்தில் அமைச்சரின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, அந்தக் கூட்டத்துக்குள் பார்வையாளர் போல் உள்ளே புகுந்த தற்கொலைப் படை தீவிரவாதி தன்னிடம் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் அந்த கட்டிடம் முழுவதுமாக சரிந்தது.
தகவல் அறிந்து போலீஸாரும் ராணுவத்தினரும் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்டனர். இந்த தாக்குதலில் அமைச்சர் உட்பட 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இன்னும் சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்கிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.