சீனாவின் ஹுபெய் மாகாணம், வூஹானில் கடந்த ஆண்டு டிசம்பரில் கரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாகாணத்தில் 81,394 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. 3,295 பேர் உயிரிழந்தனர். சீன அரசின் கடுமையான நடவடிக்கைகளால் ஹுபெய் மாகாணத்தில் கரோனா வைரஸ் பரவுவது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அமலில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து ஹுபெய்மாகாண மக்கள், அங்கிருந்து வெளியேறி அண்டை மாகாணமான ஜியாங்ஜி பகுதிகளில் குடியேற முயற்சிக்கின்றனர். ஆனால் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜியாங்ஜி மாகாண மக்கள், ஹுபெய் மாகாண மக்களை விரட்டியடிக்கின்றனர்.
இருதரப்பு மோதல்
ஜியாங்ஜி மாகாணத்தின் ஜுஜியாங் நகர எல்லையில் ஹுபெய் மாகாண மக்கள் நேற்று முன்தினம் பெருந்திரளான கூடினர். அவர்களை உள்ளூர் மக்கள் தடுத்து நிறுத்தினர். அங்குள்ள நதி மேம்பாலத்தில் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஜியாங்ஜி மாகாண அதிகாரிகள், போலீஸாரும் தங்கள் மாகாண மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இதேபோல இதர நகரங்களின் எல்லைப் பகுதிகளில் இரு மாகாணங்களின் மக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் அரசு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
வீடியோக்கள் வைரல்
சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு ஹுபெய் மாகாண மக்கள் சென்றபோது அங்குள்ள ஓட்டல்கள், விடுதிகளில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீனா முழுவதும் இதேநிலை நீடிக்கிறது. கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹுபெய் மாகாண மக்களை இதர மாகாணங்களின் மக்கள் விரட்டியடித்து வருகின்றனர். இதனால் சீனாவில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. வன்முறை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.