பிரிட்டனில் உள்ள மிகப்பெரும் தொழிலதிபரான ஸ்வராஜ் பாலின் பேரன் அகில் பாலின் திருமணம் ஹங்கேரியில் பிரம்மாண்டமான முறையில் மூன்று நாட்கள் நடைபெற்றது.
அகில் பால் மற்றும் பாகிஸ் தானைச் சேர்ந்த பிஸ்மா மவ்ஜிக் கும் இந்திய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதற்காக, இந்தியாவில் இருந்து சமையல் கலைஞர்களும், திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கடந்த வாரம் ஹங்கேரிக்குச் சென்றனர்.
சுமார் 600 பேர் கலந்து கொண்ட இந்த விழாவில், ஸ்வராஜ் பால் புரோகிதராக இருந்து மந்திரங்கள் ஓதி மணமக்களுக்கு திருமணம் முடித்து வைத்தார். இந்த நிகழ்ச்சி புடாபெஸ்ட்டில் உள்ள புடா கேஸ்டில் எனும் அரண்மனையில் நடைபெற்றது.
இதுகுறித்து ஸ்வராஜ் பால் கூறும்போது, "எனக்கு 1954ம் ஆண்டு முதலே ஹங்கேரியைத் தெரியும். இந்த நாட்டில் முதலீடு செய்வதற்கு ஆலோசிக்கும் இடமாக இந்த விழாவை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். இந்த விழாவுக்காக ஒட்டுமொத்த ஹங்கேரியும் தயாரானதாக நினைக்கிறோம்.
இதுதான் நாட்டில் தற்போது விவாதிக்கப்படும் விஷயமாகவும் மாறியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தங்கள் குடும்பங்களுடன் பங்கேற்ற இரண்டு ஹங்கேரிய அமைச்சர் களும், எங்களின் ஆடல், பாடல் மற்றும் மெஹந்தி உட்பட பல நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்" என்றார்.
இந்த விழாவுக்கு எவ்வளவு செலவானது என்று அவரிடம் கேட்டபோது, அவர் சரியான தொகையைக் கூறாமல், "அது மிகவும் குறைவுதான்" என்றார்.