கரோனா வைரஸ் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் லாக்-டவுன் அறிவிக்கப்பட்டதை மீறி ஜொஹான்னஸ்பர்கில் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க குழுமிய மக்கள் மீது போலீஸார் ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர்.
ஜொஹான்னஸ்பரில் ஷாப்ரைட் என்ற பிரபல மளிகைக் கடை முன்பாக 200-300 பேர் குவிந்தனர். இது ஜொஹான்னஸ்பர்கில் உள்ள குற்ற நடவடிக்கை அதிகம் உள்ள இயோவில்லில் உள்ளது, இது வர்த்தக நகரமும் கூட. தென் ஆப்பிரிகாவில் 2வது நாளாக தேசிய அளவிலான லாக்-டவுன் நடைமுறையில் இருந்து வருகிறது.
கியூவில் நின்றாலும் பரவாயில்லை ஒருவரையொருவர் இடித்து கொண்டு சமூக விலகலைக் கடைபிடிக்கவில்லை. உடனடியாக போலீஸ் அங்கு விரைந்து வந்து எச்சரித்தனர், பிறகு அவர்களைக் கலைக்க ரப்பர் புல்லட்களால் சுட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஷாப்பிங் வந்த மக்கள் அதிர்ச்சியில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பதற்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட குழந்தையுடன் வந்தவர்கள் கீழே விழுந்தனர். இதைவிடவும் காட்டுமிராண்டித்தனமாக மக்களை ஆடு மாடுகள் போல் சாட்டையை சொடுக்கி சமூக விலகல் விதிகளை நடைமுறைப் படுத்தினர்.
தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா 21 நாட்கள் லாக்-டவுனை அறிவித்தார். ஆனால் பல ஏழை மக்கள் உத்தரவை ஏற்காமல் உணவுக்காக வெளியே வர நேரிட்டது.
தென் ஆப்பிரிக்காவில் 1,170 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.