உலகம்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் பிரதமர்

செய்திப்பிரிவு

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கரோனா வைரஸ், ஆசிய, ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் பாரபட்சம் இல்லாமல் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது.

உலகம் முழுவதும் இந்த வைரஸால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,658 ஆக உயர்ந்துள்ளது. 578 பேர் பலியாகியுள்ளனர்.

நிலைமை மோசமடைந்ததை அடுத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், யுகேவை 3 வாரங்களுக்கு லாக் டவுன் செய்து அண்மையில் உத்தரவிட்டார். இதற்கிடையே அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கான லேசான அறிகுறிகள் ஏற்பட்டன. தற்போது கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது.

நானே என்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனினும் அரச நடவடிக்கைகளை காணொலிக் கருத்தரங்கு மூலம் நடத்துவேன். நான் அனைவரும் ஒன்றுசேர்ந்து கரோனாவை வென்று காட்டுவோம். #StayHomeSaveLives" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிரிட்டன் அரண்மனை ஊழியருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து ராணி எலிசபெத் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் உலக நாடுகளிலேயே கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் பிரதமர் போரிஸ் ஜான்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT