கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிற நாடுகளின் மனிதாபிமான உதவிகளை ஈரான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஈரானில் கோவிட்-19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரம் பேரைக் கடந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
ஈரானில் கோவிட் காய்ச்சலால் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து கோவிட் காய்ச்சல் பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஈரானுக்கு உதவ அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளன. ஆனால் இந்நாடுகளின் மருத்துவ உதவிகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. எனினும் ஈரான் பிற நாடுகளின் உதவிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசுத் தரப்பில், “கோவிட்-19 காய்ச்சலைத் தடுப்பதற்காக பிற நாடுகள் வழங்கும் மனிதாபிமான உதவிகளை ஈரான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அமெரிக்காவின் மருத்துவ உதவிகளை ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி பலமுறை மறுத்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்கா வழங்கும் மருத்துவ உதவிகள் வைரஸை இன்னும் கூடுதலாகப் பரப்பினால் என்ன செய்வது என்று ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.