உலகம்

லாக்-டவுன் மட்டும் போதாது; கரோனாவை எதிர்த்துத் தாக்கி அழிக்கும் நடைமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும்: உலக சுகாதார அமைப்பு

ஏஎன்ஐ

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ் கரோனா வைரஸை ஒழிக்க லாக் டவுன் மட்டும் போதாது, நோய்க்கிருமித் தொற்றை கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து, சிகிச்சை அளிப்பதும் மிக மிக அவசியம் என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே சீன மருத்துவர்களும் டெஸ்ட் டெஸ்ட் டெஸ்ட் .. இது ஒன்றுதான் ஒரே வழி, தென் கொரியா பரிசோதனைகளை தீவிரப்படுத்தியதன் மூலம் கட்டுப்படுத்தியதற்கு சிறந்த சான்று என்றனர்.

இந்நிலையில் டெட்ரோஸ் கெப்ரியேசுஸ் கூறும்போது, “கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுக்க பல நாடுகள் லாக் டவுனை அமல்படுத்தியுள்ளது. ஆனால், இந்த நடைமுறைகள் மட்டுமே தொற்று நோயை ஒழிக்க போதுமானதாகாது. எனவே கரோனா வைரஸைத் தாக்கி அழியுங்கள் என்று அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

நாங்கள்தான் அனைத்து நாடுகளையும் லாக் டவுன் செய்யக் கோரினோம். ஆனால், இந்தக் காலகட்டத்தை கரோனாவைத் தாக்கி அழிக்கப் பயன்படுத்துங்கள் என்று இப்போது அழைப்பு விடுக்கிறோம். இரண்டாவது சாளரத்தைத் திறந்திருக்கிறோம். ஆனால், இதனைப் பயனுள்ள வகையில் நாம் உபயோகப்படுத்திக் கொள்வது அவசியம்.

கரோனா தொற்றுள்ளவர்களைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி, பரிசோதித்து சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையை ஆக்ரோஷமாகப் பின்பற்ற வேண்டிய நேரம். ஆகவே லாக் டவுன் காலகட்டத்தை கரோனோவைத் தாக்கி அழிக்க வேண்டிய காலகட்டமாக மாற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT