கரோனாவினால் பீடிக்கப்பட்டு திக்குமுக்காடி வரும் உலகின் நம்பர் 1 பணக்கார நாடான அமெரிக்கா என்றுதான் உலகின் அறிவுபூர்வமான குரல்களுக்குச் செவிசாய்க்குமோ, கரோனாவை சீனா வைரஸ், வூஹான் வைரஸ் என்று கூறுவதை நிறுத்துமோ என்று சீனா விமர்சித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் செய்தியாளர்களிடையே கூறும்போது,
“பல முறை கூறிவிட்டோம் அமெரிக்காவில் கரோனா வைரஸை சீனாவுடனும், வூஹானுடனும் தொடர்பு படுத்தி தொடர்ந்து சீனாவையும் சீன மக்களையும் இழிவு படுத்தி வருகின்றனர். சீன மக்கள் இதனை கடுமையாக எதிர்க்கின்றனர்.
அமெரிக்காவிலேயே மனசாட்சி உள்ள பலரும் அறிவார்த்தக் குரல்களும் சீனா வைரஸ், வூஹான் வைரஸ் என்று கூறுவதைக் கண்டிக்கின்றனர். இது வெளிப்படையாக நிறவெறியையும் பிறர் மீதான பயத்தையும் பீதியையும் கிளப்புவதாகும்.
அமெரிக்காவில் பல தனிநபர்களும் அரசின் இது போன்ற அபத்தக் களஞ்சியமான விவரிப்புகளைக் கண்டித்து வருகின்றனர்.
வூஹான் வைரஸ் என்று மைக் பாம்பியோ கூறுகிறார், சீனா வைரஸ் என்று ட்ரம்ப் வர்ணிக்கிறார் இந்த வார்த்தைகள் எங்கள் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்கின்றன.
பெரிய நோய் பரவும் தருணத்தில் அமெரிக்கா அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பிறர் மேல் பழி சுமத்தும் செயலை கேவலமானது என்று அமெரிக்காவிலேயே பலர் கருதுகின்றனர்.
அமெரிக்கா இது போன்ற சில்லரைத் தனமான போக்குகளை விடுத்து உலகம் சிக்குண்டு கிடக்கும் கரோனாவிலிருந்து மீள உலக நாடுகளுடன் இணைந்து சேவையாற்றினால் நல்லது” என்று ஜெங் ஷுவாங் கடுமையாக சாடினார்.