கரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் போர்ச்சூழலில் உள்ள ஏமன் நாட்டில் கைசுத்திகரிப்பான் வாங்கும் அளவுக்குக் கூட வசதியில்லாத ஏழை மக்களைக் கொண்டதாக உள்ளது.
ஏமனில் சுகாதார அமைப்பு ஒழுங்கற்ற நிலையில் உள்ளது, ஆனால் நல்ல வேளையாக அங்கு இன்னமும் ஒரு கரோனா தொற்று கூட ரிப்போர்ட் ஆகவில்லை. இந்நிலையில் மலிவு விலை கிருமிநாசினியையே கூட ஆடம்பர பொருளாகவே அங்கு பார்க்கப்படுகிறது எனும்போது ஏமனில் பரவினால் மிகப்பெரிய அழிவையே ஏற்படுத்தும் என்று உலகச் சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஈரான் ஆதரவு ஹுதி போராளிகளுக்கு எதிராக ஏமன் அரசைக் காக்க சவுதி தலைமை ராணுவக் கூட்டணி அங்கு தலையிட்டு பெரிய போர்ச்சூழலை அந்த நாடு சந்தித்து வருகிறது. இந்தப் போர்ச்சூழலினால் அந்த நாட்டு மக்கள் தொகையில் 30% அதாவது 3 கோடி மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது, ஏமனை ஐநா உலக மகா மானுட நெருக்கடி நிலையில் இருப்பதாக ஏற்கெனவே குறித்தது.
டாக்டர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ் என்ற அமைப்புக் கூறும்போது, ஏமன் மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கூட இல்லை. சோப்புகள் இல்லை.
1 கோடியே 80 லட்சம் மக்கள், இதில் 92 லட்சம் குழந்தைகள், இவர்களுக்கு பாதுகாப்பான நீரே கிடைக்க வழியில்லை, மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்குத்தான் பைப் மூலம் தண்ணீர் கிடைத்து வருகிறது. மோசமான குடிநீரையே சமையலுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே 2017-ல் மிகப்பெரிய காலரா நோய் ஏற்பட்டு பலர் பலியாகியுள்ள நிலையில், வரவிருக்கும் மழைக்காலத்தில் மீண்டும் காலரா ஏற்பட வாய்ப்புள்ளது எனும் நிலையிலும் கரோனா அச்சுறுத்தலும் சேர்ந்தால் என்ன ஆவது என்ற கவலை அங்கு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் சுகாதார மையங்கள் பாதிதான் இயங்குகிறது. திறந்திருக்கும் மருத்துவ மையங்களிலும் மருந்துகள், சாதனங்கள், பணியாளர் பற்றாக்குறை இருந்து வருகிறது.
“5 ஆண்டுகால போர், மரணம், புலப்பெயர்வு, ஆகியவற்றுக்கிடையே உலக மகா கொள்ளை நோயான கரோனாவும் சேர்ந்தால்... ஆகவே உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று யூனிசேஃப் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
சவுதி தலைமை ராணுவம் ஏமனில் நுழைந்து போர் ஆரம்பித்த பிறகே 2015- மார்ச் முதல் பல்லாயிரக்கணக்கான மக்கள் அதுவும் அப்பாவி மக்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தப் போரினால் ஒருவருக்கும் எந்த பயனும் இல்லை மாறாக நாட்டின் சுகாதார அமைப்பையே காலி செய்து நோய்ப்பரவலை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்றினால் பெரிய பேரழிவுதான் இங்கு நடக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கையை அடிக்கடி அலம்பிக் கொள்வதுதான் கரோனாவை தடுக்க இருக்கும் பல வழிகளில் பிரதானமானது. ஆனால் ஏமன் மக்கள் தொகையில் 50% க்கும் மேலானோர் கிருமி நாசினி வாங்குவதற்கு கூட வக்கற்று உள்ளனர், என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஏமன் பற்றி ட்வீட் செய்துள்ளது.
உலகம் முழுதும் ராணுவத்துக்குச் செலவிடும் தொகையை நாடுகள் சுகாதாரத்துக்கோ, அடிப்படை மருத்துவ ஆராய்ச்சிக்கோ செலவிடவில்லை என்பதே பணக்கார நாடுகளான அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் கரோனாவினால் திண்டாடுவதற்குக் காரணம்.
இந்நிலையில் ஏமன் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக நிபுணர்களும் மனிதநல ஆர்வலர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.