பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 882 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை தரப்பில், “பாகிஸ்தானில் கோவிட் (கரோனா வைரஸுக்கு) காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 882 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கோவிட் காய்ச்சல் பாதிப்புக்கு 6 பேர் பலியாகியுள்ளனர். 13 பேர் குணமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் சிந்து மாகாணம்தான் கோவிட் காய்ச்சலால் கடுமையான பாதிப்பைச் சந்திதுள்ளது. சிந்து மாகாணத்தில் சுமார் 394 பேரும், .பஞ்சாப் மாகாணத்தில் 249 பேரும், பலுசிஸ்தானில் 110 பேரும் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரோனா வைரஸைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு எடுத்து வருகிறது
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.