கரோனா பரவியது அவர்களின் குற்றமல்ல என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீன வைரஸ் என்று கூறியதால் ஏற்பட்ட சர்ச்சையால் அவர் இவ்வாறு பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது.
உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ், சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்குள்ள ஹூபெய் மாகாணத்தில் வூஹான் நகரத்தில் இருப்பவர்களுக்கு முதன்முதலாகத் தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் கரோனா பரவியது.
இதற்கிடையே கடந்த வாரத்தில் ''சீன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் அமெரிக்கா முழுமையான ஆதரவு அளிக்கும்'' என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்க அதிகாரிகள் சீனாதான் இந்த வைரஸுக்குக் காரணம் என்று கூறிவந்த நிலையில், முதல் முறையாக ட்ரம்ப்பே நேரடியாக இதைத் தெரிவித்தது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதனால் ஆசிய- அமெரிக்கர்கள், அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உலக சுகாதார நிறுவனமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் தனது கருத்தில் இருந்து பின்வாங்கியுள்ள ட்ரம்ப், ''அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் வசிக்கும் ஆசிய- அமெரிக்க சமூகத்தை நாம் காத்து வருகிறோம். இதை அனைவரும் அறிய வேண்டியது முக்கியம். அவர்கள் ஆச்சரியப்படுத்தும் மனிதர்கள்.
கரோனா பரவியதற்கு அவர்கள் காரணம் இல்லை. நோய்த் தாக்குதலில் இருந்து வெளியே வர அவர்கள் நம்முடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஆசிய நாடுகளில் சீனாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.