கரோனா வைரஸால் உலக முழுவதும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதற்கு சீனாவை பிரிட்டிஷ் எழுத்தாளர் கடுமையாக சாடி உள்ளார்.
பிரிட்டிஷ் எழுத்தாளரும், நகைச்சுவை கலைஞரான பாட் கான்டெல் உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவியதற்கு சினாவையும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ வுஹான் நகரில் கரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் தோன்றியபோது, ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக சீனா அதை தீர்க்கமாக கையாண்டிருக்க வேண்டும்.ஆனால் சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது முகத்தை காப்பாற்றுவதற்காக அதை மூடி மறைத்தது. அதனை கட்டுப்படுத்த தவறிவிட்டது.
இவ்வைரஸ் பற்றி வெளியில் பேசியவர்களையும் சீன அரசு கைது செய்தது. அவர்களது முகத்தை காப்பாற்றுவதற்காக வெளி உதவிகளை மறுத்துவிட்டனர். தற்போது கரோனா வைரஸ் வாழ்வையும், உலக பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது.
கரோனா வைரஸால் உலகில் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கு சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சித்தான் நேரடி பொறுப்பாகும்” என்று சீனாவை சாடியுள்ளார்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸுக்கு) இதுவரை உலகளவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.