‘‘இந்தியா - பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருவதால், இரு நாடுகளும் பொறுமை காத்து கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்’’ என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 15-ம் தேதி இந்திய சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான் படைகள் எல்லையில் தாக்கியதில் பஞ்சாயத்து தலைவர், சிறுவன் உட்பட 6 பேர் பலியாயினர். அதற்கு இந்திய படையினரும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இரு நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இந்த கூட்டத்தில் இரு நாடுகளிலும் அமைதி ஏற்படும் வகையில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், இந்தியா - பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லை கோட்டருகே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அங்கு பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இரு நாட்டு மக்களின் நலனுக் காக இரு நாடுகளும் செயல்பட வேண்டும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் டெல்லியில் வரும் 23-24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இந்திய தரப்பில் அஜித் தோவல், பாகிஸ்தான் தரப்பில் சர்தாஜ் அசிஸ் ஆகியோர் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.