சீனாவில் கரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து 3-வது நாளாக ஒருவர் கூட பாதிக்கவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் இந்த வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,500-ஐ தாண்டியுள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கரோனா வைரஸ் உருவானது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இது தொற்று நோய் என்றும்சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்நாட்டின் பிறமாநிலங்களுக்கும் இந்த வைரஸ் வேகமாக பரவியது. இதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறது.
நேற்று முன்தினம் வரை சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,008 ஆகஅதிகரித்துள்ளது. இதில் 3,255 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் மட்டும் 7 பேர் உயிரிழந்தனர். இதுவரை 71,740 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 6,013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சீனாவில் கரோனா வைரஸ் பரவுவது கட்டுக்குள் வந்துள்ளது. தொடர்ந்து 3-வதுநாளாக நேற்று முன்தினமும் இந்தவைரஸால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் புதிதாக 106 பேருக்கு இந்த வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், உள்நாட்டில் இந்த வைரஸ் பரவவில்லை என்றாலும், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 41 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதுகண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்த வந்தவர்கள் ஆவர்.
இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும்தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவைத் தொடர்ந்து 150-க்கும்மேற்பட்ட உலக நாடுகளுக்கும் கரோனா வைரஸ் பரவியுள்ளது. இதில் இத்தாலி, ஈரான், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.8 லட்சத்தைத் தாண்டிஉள்ளது. உயிரிழப்பு 11,400-ஐ தாண்டி உள்ளது. இதில் அதிகபட்சமாக சீனாவை பின்னுக்குத் தள்ளி இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஈரானில் உயிரிழப்பு 1,500-ஐ தாண்டி யுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு 4 கட்டங்களாக கூறுகின்றனர். இதில், மக்களிடம் இருந்து பரவும் (சமூக பரவல்) 3-ம் நிலையில் பல நாடுகள் உள்ளன. - பிடிஐ