உலகம்

இத்தாலியில் கரோனாவுக்கு மேலும் 5 டாக்டர்கள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

இத்தாலியில் கரோனா வைரஸ் காய்ச்சலுக்கு மேலும் 5 டாக்டர்கள் உயிரிழந்தனர்.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காய்ச்சல், இத்தாலியை கடுமையாக பாதித்துள்ளது. அங்கு இதுவரை இல்லாத அளவாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 4,207 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. 475 பேர் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தனர்.

இத்தாலியில் 2,600-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டில் கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 8.3 சதவீதம் ஆகும். இத்தாலியில் கரோனா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த 8 டாக்டர்கள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கெனவே உயிரிழந்தனர். இந்நிலையில், கரோனா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் 5 டாக்டர்கள் அங்கு உயிரிழந்தனர். இதன்மூலம் வைரஸ் காய்ச்சலுக்கு பலியான டாக்டர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

இறந்த 5 டாக்டர்களில் இருவர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். இவர்கள் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போரில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள்.

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் மருத்துவப் பணியாளர்களின் பணி அவசியமாகியுள்ள நிலையில் அவர்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்பு மக்களை கவலை அடையச் செய்துள்ளது. மேலும் மருத்துவப் பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லை என்ற விமர்சனத்தையும் எழுப்பி யுள்ளது.

SCROLL FOR NEXT