இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில் ரணில் விக்ரமசிங்கே (66) தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அவர் மீண்டும் அந்த நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். முன்னாள் அதிபர் ராஜபக்ச (69) தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் உள்ளன. இதில் 196 பேர் தேர்தல் மூலமும் 29 பேர் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த நாட்டில் திங்கள்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அன்று இரவு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. நேற்று அதிகாலை முதல் முடிவுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன.
வித்தியாசமான தேர்தல்
இந்தியாவைப் பொறுத்தவரை தொகுதிகளின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்று நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் சற்று வித்தியாசமானது.
தொகுதிகளுக்குப் பதிலாக அந்த நாட்டில் 22 தேர்தல் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அங்குள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர் களின் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்படுகிறது.
மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 160 உறுப்பினர்களும் கட்சிகள் பெறும் வாக்குகள் அடிப்படையில் 36 உறுப்பினர்கள் போனஸ் அடிப்படையிலும் தேர்வு செய்யப் படுகின்றனர்.
இந்த நேரடி தேர்தல் நடைமுறையை தவிர்த்து தேசிய பட்டியல் மூலம் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாச்சாரத்தின்படி 29 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக் கப்படுகின்றனர்.
தேர்தல் முடிவுகள்
நேற்று காலை தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி முன்னணியில் இருந்தது. நேற்று இரவு நிலவரப்படி மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் அந்தக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் அக்கட்சிக்கு 93 இடங்கள் கிடைத்தன. மேலும் அக்கட்சி பெற்ற வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையில் 14 இடங்கள் கிடைத்துள்ளன. இரண்டையும் சேர்த்து மொத்தம் 107 இடங்களை ரணில் கட்சி பெற்றுள்ளது.
முன்னாள் அதிபர் ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 8 மாவட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதன்மூலம் அக்கட்சி 83 இடங்களைப் பிடித்துள்ளது. மேலும் அக்கட்சி பெற்ற வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையில் 12 இடங்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. அதன் படி ராஜபக்ச கூட்டணி மொத்தம் 95 இடங்களை பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. அந்த கூட்டமைப்புக்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 இடங்கள், வன்னி மாவட்டத்தில் 4 இடங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இடங்கள், அம்பாறை, திரிகோணமலை மாவட்டங்களில் தலா 1 இடம் என மொத்தம் 14 இடங்கள் கிடைத்துள்ளன.
தேசிய அளவிலான வாக்கு சதவீதத்தில் ரணில் அணிக்கு 50,98,927 வாக்குகள் கிடைத்துள்ளன. இது 45.7 சதவீதம் ஆகும். ராஜபக்ச அணிக்கு 47,32,669 வாக்குகள் கிடைத்துள்ளன. இது 42. 4 சதவீதம் ஆகும். இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா 5,43,944 வாக்குகளைப் பெற்று 4.9 சதவீதத்தை எட்டியுள்ளது.
புதிய பிரதமர் ரணில்
ஆட்சி அமைக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஐக்கிய தேசிய கட்சிக்கு தற்போது 107 இடங்கள் உள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பும் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
மேலும் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் சிலர் ரணில் அணியில் சேரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது.
முந்தைய செய்திகளின் தொகுப்பு:
இலங்கை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். தனது தோல்வியை ஒப்புக்கொண்ட ராஜபக்சவின் கனவு கலைந்தது.
மொத்தமுள்ள 22 மாவட்டங்களில், ஐக்கிய தேசிய கட்சி 11 மாவட்டங்களிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 8 மாவட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேநேரத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றிப் பெற்றுள்ளது.
ரணில் விக்ரமசிங்கே பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்கிறது
இலங்கையின் 8-வது நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 225 உறுப்பினர்கள் கொண்ட அவைக்கு 106 இடங்களில் வெற்றியுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பார் என்று முன்கூட்டியே தெரிந்த விஷயமே.
மொத்தம் 225 தொகுதிகளில் மாவட்ட அளவு இடங்கள் 196. இதற்குத்தான் வாக்குப்பதிவுகள் திங்களன்று நடைபெற்றது. வாக்குகள் பதிவான எண்ணிக்கைகளின் படி தேசியப் பட்டியலின் கீழ் இடங்கள் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் ஐக்கிய தேசிய கட்சி 93 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன் வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் விகிதாச்சார முறையில் மேலும் 13 இடங்களைப் பெற்று 106 இடங்களைப் பெற்றுள்ளது.
83 இடங்களில் வென்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 83 இடங்களில் வெற்றி பெற்றதோடு, வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் விகிதாசார முறைப்படி மேலும் 12 இடங்களை தேசிய பட்டியலின் கீழ் பெற்று மொத்தம் 95 இடங்களைப் பெற்றுள்ளது.
தமிழ் தேசியக் கட்சி/இலங்கை தமிழ் அரசுக் கட்சி 16 இடங்களைப் பெற்றது. ஜனதா விமுக்தி பெரமுனா 6 இடங்களையும் இலங்கை முஸ்லிம் கட்சி மற்றும் ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்தையும் பெற்றன. தமிழ் தேசியக் கட்சிக்கும், ஜனதா விமுக்தி பெரமுனாவுக்கும் தேசியப் பட்டியலின் கீழ் தலா 2 இடங்கள் கிடைத்தன.
தொகுதி வாரியாக, 4.30 மணியளவில் 196 தொகுதிகளுக்குமான முடிவுகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி 93 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 83 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 14 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஜனதா விமுக்தி பெரமுனா 4 தொகுதிகளிலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழம் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தலா ஒரு இடத்தையும் வென்றுள்ளன.
தொகுதி வாரியாக 3.30 மணியளவில் 184 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் ஐக்கிய தேசிய கட்சி 88 தொகுதிகளிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 81 தொகுதிகளிலும், தமிழ் தேசிய கட்சி/இலங்கை தமிழ் அரசுக் கட்சி 10 தொகுதிகளிலும், ஜனதா விமுக்தி பெரமுனா 4 இடங்களிலும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் வெற்றி குறித்து ரணில் விக்கிரமசிங்கே வெளியிட்ட அறிக்கையில், "அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பண்பட்ட சமூகத்தை உருவாக்குவோம். இலங்கையை புதிய தேசமாக உருமாற்றுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள ராஜபக்ச, "நான் பிரதமராகும் கனவு தகர்ந்துவிட்டது. ஐக்கிய தேசிய கட்சியுடனான போட்டியில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டேன். நல்ல போட்டியில் தோல்வியடைந்ததை ஒப்புக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
முந்தையச் செய்திப் பதிவுகள்:
தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரத்தில், நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்ச தனது தோல்வியை ஒப்புக் கொண்டதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏ.எஃப்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஜபக்ச நமது செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 8 மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், ஐக்கிய தேசிய கூட்டணி 11 மாவட்டங்களில் முன்னிலை வகிக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீதமுள்ள 3 மாவட்டங்களில் தமிழ் கட்சிகள் பெரும்பான்மை இடங்களை வெல்லும் எனத் தெரிவித்துள்ளார்" எனக் குறிப்பிட்டது.
ராஜபக்ச மறுப்பு:
ஆனால், இத்தகவலை ராஜபக்ச திட்டவட்டமாக மறுத்தார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை. எனவே, இப்போதே வெற்றி, தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு இடமில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
70 சதவீத வாக்குப்பதிவு
இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இதில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்தத் தேர்தலில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கும் (யுபிஎப்ஏ) பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சிக்கும் (யுஎன்பி) இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் உள்ளன. இதில் 196 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மீதம் உள்ள 29 பேர் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்துக்கு ஏற்ப நியமிக்கப்படுவர். இதில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.
தேர்தல் களத்தில் மொத்தம் 6,151 வேட்பாளர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் 3,653 பேரும் சுயேச்சைகளாக 2,498 பேரும் களத்தில் உள்ளனர்.
ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 449 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். அவர்களுக்காக நாடு முழுவதும் 12,314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. தேர்தல் பணியில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதுதவிர ஐரோப்பிய ஒன்றியம், காமன்வெல்த் அமைப்பு களைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப் பாளர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர்.
ராஜபக்சவின் பிரதமர் கனவு
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் (யுபிஎப்ஏ) பிரதமர் கனவுடன் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிடுகிறார். முன்னாள் அதிபர் ஒருவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதன்முறை.
ஆனால் அந்தக் கூட்டணியின் தலைவரும் அதிபருமான மைத்ரி பால சிறிசேனா, ராஜபக்சவை ஒருபோதும் பிரதமராக்க மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். எதிர்த்தரப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே பிரதமர் வேட்பாளராக களமிறங்கி யுள்ளார்.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சிறிசேனா. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சவை எதிர்த்து களமிறங்கினார் சிறிசேனா. இவருக்கு எதிரிக்கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரம சிங்கே உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து ராஜபக்சவை வீழ்த்தி சிறிசேனா வெற்றி பெற்று அதிபரானார் என்பது குறிப்பிடத்தக்கது.