நேபாள எல்லைக்கு அருகே திபெத்தில் இன்று காலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்துடன் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 28.63 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 87.42 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை, 10 கி.மீ. ஆழத்துடன் அமைந்துள்ளது.
இதுகுறித்து சினுவா செய்தி ஊடகம் கூறியுள்ளதாவது:
''திபெத்தில் உள்ள டிங்ரி மாகாணத்தில் ஜிகேஸ் நகரம் அருகே இன்று காலை 9:33 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பகுதி நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்நிலநடுக்கத்தில் வீடு இடிந்து விழுந்ததோ அல்லது போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகளில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்டள்ள டிங்ரி மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் தெற்கு எல்லைப் பகுதியான நேபாளத்தின் மவுண்ட் எவரெஸ்ட் தேசிய இயற்கை ரிசர்வ் பகுதியைச் சேர்ந்தவை.
மேலும், தகவல்களைச் சேகரிக்க மாகாண அரசு கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் அதிகாரிகளை அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையில், ஒன்பது தீயணைப்பு வீரர்கள் மற்றும் மூன்று தீயணைப்பு டெண்டர்கள் மையப்பகுதிக்கு அனுப்பப்பட்டன. 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் டஜன் கணக்கான வாகனங்கள் காத்திருப்புடன் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 7.18 மணிக்கு காத்மாண்டுவில் உள்ள தேசிய நில அதிர்வு மையத்தில் 6.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கத்தின் மையப்பகுதி திபெத்தின் குயிலிங்கில் அமைந்திருப்பதாக நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் உயிரிழப்பு அல்லது சொத்து சேதம் ஏற்பட்டது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஐந்து நாட்களுக்கு முன்பு, மேற்கு நேபாளத்தின் சுற்றுலா மையமான போகாரா 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது''.
இவ்வாறு சினுவா செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.