உலகம்

சிங்கப்பூர் பிரதமருக்கு வலைப் பதிவாளர் இழப்பீடு

செய்திப்பிரிவு

சிங்கப்பூர் பிரதமர் லீ ஷீன் லூங் மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை கூறிய வலைப்பதிவாளர் ஒருவர், அவதூறு வழக்கு எச்சரிக்கைக்குப் பிறகு இழப்பீடு வழங்க முன்வந்துள்ளார்.

இதுகுறித்து ராய் கெர்ங் யி-லிங் என்ற அந்த இளைஞரின் வழக்கறிஞர் எம்.ரவி கூறுகையில், “பிரதமருக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக எனது வாடிக்கையாளர் 4 ஆயிரம் டாலர்கள் (சுமார் ரூ.2,35,000) இழப்பீடு வழங்க முன்வந்துள்ளார். சுகாதார ஊழியராகப் பணியாற்றி வரும் அவர் தனது வருமானத்தின் அடிப்படையில் இந்தத் தொகையை வழங்க முன்வந்துள்ளார். இதை பிரதமரின் வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளேன்” என்றார்.

ராய் கெர்ங் யி-லிங் கடந்த மே 15-ம் தேதி தனது வலைப் பக்கத்தில், வருங்கால வைப்பு நிதிக்காக சிங்கப்பூர் மக்கள் செலுத்தும் பணத்தை பிரதமர் லீ ஷீன் லூங் முறைகேடாகப் பயன்படுத்துகிறார்” என்று குற்றம் சாட்டியிருந்தார்.இதைத் தொடர்ந்து, “கெர்ங் மன்னிப்பு கேட்கவேண்டும், பிரதமரின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று பிரதமரின் வழக்கறிஞர் தேவேந்தர் சிங் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

“வருங்கால வைப்பு நிதியை நிர்வகிப்பதில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதே தனது கருத்தின் நோக்கம்” என்று குறிப்பிட்ட கெர்க், தனது கருத்தை திரும்பப் பெற்றார். கடந்த வெள்ளிக்கிழமை மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் பிரதமரின் வழக்கறிஞர் தேவேந்தர் சிங் இதை ஏற்க மறுத்துவிட்டார். “கெர்ங்-ன் வார்த்தைகள் உளப்பூர்வமாக இல்லை” என்றார். இந்நிலையில் பிரதமருக்கு இழப்பீடு வழங்க கெர்ங் முன்வந்துள்ளார். இதுகுறித்து தேவேந்தர் சிங்கின் கருத்தை உடனே அறிய முடியவில்லை.

SCROLL FOR NEXT