உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால் 2 கோடியே 50 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. எனினும் உலக நாடுகள் ஒன்றிணைந்து திட்டமிட்டால் ஓரளவுக்கு பாதிப்பைக் குறைக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
‘கோவிட்-19’ மற்றும் பணி உலகம்: தாக்கமும் எதிர்வினையும்’ என்ற தலைப்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதில், கரோனா வைரஸ் காய்ச்சல் பரவல் உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கடுமையாக பாதித்திருப்பதால் 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார வீழ்ச்சியைப் போல் இந்த ஆண்டும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக 2008-09-ம் ஆண்டில்ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடியால் 2 கோடியே 20 லட்சம் பேர்வேலை இழந்தனர். தற்போது கரோனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பால் 2 கோடியே 50 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயகரமான சூழல் உருவாக்கி இருக்கிறது. இதனால் உலக அளவில் ரூ.255 லட்சம் கோடி வருமான இழப்பு ஏற்படவிருக்கிறது.
வேலை இழப்பு ஒருபுறம் இருக்க மறுபுறம் தகுதிக்கு குறைவாக வேலை செய்யும் நிலைக்கு ஊழியர்கள் தள்ளப்படுவார்கள். அதிலும் வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக வேலை நேரத்தைக் குறைப்பது என்பது தினக்கூலி வாங்குபவர்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.பொதுமக்கள் நடமாட்டத்துக்குகட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப் பதால் சுய வேலைவாய்ப்பும் இப்போது கைகொடுக்காது.
வறுமைக் கோட்டுக்கு அருகில்அல்லது அதற்கு கீழே இருப்பவர்களின் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக நிர்மூலமாகும் அபாயகரமான காலகட்டம் இது. அதேபோல அமைப்பு சாரா தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும் அவலநிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் இருந்து மக்களை மீட்டெடுக்க பணிச் சூழலில் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், பொருளாதாரத்தையும் வேலைவாய்ப்பையும் ஊக்கப்படுத்துதல், வேலைக்கும் ஊதியத்துக்கும் உத்தரவாதம் அளித்தல்ஆகியவை உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பு, குறுகிய கால வேலை, ஊதிய விடுப்பு மற்றும் இதரமானியங்களுடன் ஊழியரின் வேலைக்கு உத்தரவாதம் அளித்தல், சிறு, குறு, நடுத்தர தொழில்செய்பவர்களுக்கு வருமான வரிவிலக்கு அளித்தல் ஆகியவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்றுசர்வதேச தொழிலாளர் அமைப்பு முன்மொழிந் துள்ளது. - பிடிஐ