கரோனா வைரஸ் காரணமாக சுமார் 50 கோடி மக்கள் தங்கள் வீடுகளில் அடைபட்டுள்ளதாக ஏஎஃப்பி தெரிவித்துள்ளது.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா, இந்தியா, பாகிஸ்தான் என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தற்போதைய தகவலின் படி சுமார் 2 லட்சம் பேர் கோவிட் - 19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 9,000 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் கோவிட் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அவசர நிலை, ஊரடங்கு உத்தரவு போன்ற நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்கியுள்ளன. மேலும் பல நாடுகளில் அலுவலங்களில் பணிபுரியும் மக்கள் வீட்டிலிருந்து பணிகளைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சுமார் 50 கோடி மக்கள் தங்கள் வீடுகளில் அடைபட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் வெளியிட்ட கணக்கீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்ற சீனாவின் நடவடிக்கையை, இத்தாலி, ஸ்பெயின், லெபனான், பிரான்ஸ், இஸ்ரேல், வெனிசுலா போன்ற நாடுகள் பின்பற்றி வருகின்றன.
இன்னும் பல நாடுகளில், பொது இடங்களில் கூடுவதைத் தவிர்த்து மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.