உலகம்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போர்ச்சுக்கல்லில் அவசர நிலை பிரகடனம்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் போர்ச்சுக்கல்லில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

போர்ச்சுக்கல்லில் 600க்கும் மேற்பட்டவர்கள் கோவிட் - 19 (கரோனா வைரஸ்) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் போர்ச்சுக்கல் அரசு இறங்கியுள்ளது. அந்த வகையில் அடுத்த 15 நாட்களுக்கு அவசர நிலையை நாடு முழுவதும் அறிவித்துள்ளது.

இதுகுறித்து போர்ச்சுக்கல் அதிபர் மார்சிலோ ரபலோ கூறும்போது, “விதிவிலக்கான காலத்திற்கான விதிவிலக்கான முடிவு இது. இது ஜனநாயகத்துக்கான குறுக்கீடு அல்ல” என்று தெரிவித்தார்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பயம் தொற்றிக் கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து பயணிகள் அமெரிக்கா வருவதற்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தடை விதித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 160 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை வைரஸால் 2.03 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT