கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஆஸ்திரேலியர் அல்லாத பிற நாட்டினருக்கு அந்நாட்டு அரசு பயணத் தடை விதித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 160 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை வைரஸால் 2.03 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3 பேர் இறந்துள்ளனர். வைரஸ் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
இதன் காரணமாக, கோவிட் - 19 வைரஸை ‘உலகளாவிய நோய்த் தொற்று’ என உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்தது.
இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் மக்கள் கூட்டமாக கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்காட் மோரிசன் கூறும்போது, “ஆஸ்திரேலியர் இல்லாத அனைவருக்கும் ஆஸ்திரேயா வருவதற்கு பயணத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை நாளை மாலை முதல் அமலுக்கு வருகிறது” என்றார்.