பொதுவாக டிசிஎம் (Traditional Chinese medicine) என்று அழைக்கப்படும் சீன பாரம்பரிய மருந்து கரோனாவை எதிர்கொள்ள சீனாவுக்கு பெரிய அளவில் உதவியுள்ளது என்று சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரோனா மையமான ஹூபேய்க்கு வெளியே கோவிட்-19 நோயாளிகளில் 96.37% பாரம்பரிய சீன மருந்தே கைகொடுத்துள்ளது. ஹூபேயில் வைரஸ் தொற்றியுள்ளவர்களில் 91.05% டிசிஎம் தான் அளிக்கப்பட்டதாக மரபு சீன மருத்துவ தேசிய நிர்வாகத்தின் அதிகாரி லீ யூ என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தேசிய நோய்க்கணிப்பு மற்றும் சிகிச்சைத் திட்டத்தை வெளியிட்ட அதிகாரிகள் பாரம்பரிய சீன மருந்து பெரிய அளவில் கைகொடுத்ததோடு அந்த மருந்து கரோனாவுக்கு எதிராக பெரிய அளவில் பலன் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.
சுமார் 5,000 பாரம்பரிய சீன மருத்துவர்கள் வூஹானில் முகாமிட்டுள்ளனர். 10 மாகாணங்களில் 1,261 பேருக்கு டிசிஎம் என்கிற பாரம்பரிய சீன மருந்தைக் கொடுத்ததில் அவர்களுக்கு சின்ன அளவில் கூட கரோனா நோய் அறிகுறிகளைக் காட்டவில்லை என்கிறார் லீ யூ.
தீவிர கரோனா நோயாளிகளுக்கு டிசிஎம் அளிக்கப்பட்ட பிறகு அது காய்ச்சலைக் குறைத்தது, உடலில் பிராணவாயுவை அதிகரித்தது, நுரையீரல் திசுக்கள் தடித்துப் போய் ஏற்படும் ஃபைப்ராசிஸ் தடுக்கப்படுவதும் டிசிஎம் சிகிச்சை மூலம் தெரிய வந்தது என்கிறார் லீ.
எங்களது இந்த அனுபவத்தை உலகம் முழுதும் பகிர்ந்து கொள்ள விழைகிறோம், என்றார் லீ.
டிசிஎம் உடன் மேற்கத்திய மருந்தும் நாவல் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த உதவியதாக செவ்வாயன்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.