கரோனா வைரஸ் பாதிப்பால் இரண்டாம் உலக போருக்குப்பின் ஜெர்மனி மிகப்பெரிய சவாலை சந்ததித்துக் கொண்டிருக்கிறது என அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் வேதனை தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் கரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பயம் தொற்றிக் கொண்டுள்ளது. ஜெர்மனியில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாவிட்டாலும், அங்கு கரோனா வைரஸ் தொற்றால் மரணம் ஏற்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கரோனா வைரஸ் பாதிப்பால் ஜெர்மனி மிகப்பெரிய சவாலை சந்ததித்துக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலக போருக்குப்பின் ஜெர்மனி சந்திக்கு பெரிய சவால் இதுவாகும்.
நாட்டு மக்கள் நம்பிக்கையை இழக்காமல் இதனை எதி்ர்த்து போராட வேண்டும். வைரஸ் பரவாமல் தடுக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. உலகம் முழுவதுமே பணிகள் மொத்தமாக நின்று போயுள்ளன. ஏற்கெனவே பொருளாதார பாதிப்பை சந்தித்து வரும் நமக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும். இருப்பினும் அனைவரும் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறுவோம்.’’ எனக் கூறினார்.