உலகம்

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பாதிப்பு 254 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை கூறும்போது, ''பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. கிழக்குப் பகுதி மாகாணமான பஞ்சாப்பில் 26 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலுசிஸ்தானில் 16 பேரும், இஸ்லாமாபாத்தில் 2 பேரும் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தற்போதைய தகவலின் படி சுமார் 1,85,000 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 7,500 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலும் கரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தானில் இருந்து ஈரான் ஆன்மிக யாத்திரை சென்றவர்கள் மூலமாகத்தான் அந்நாட்டில் கரோனா வைரஸ் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT