உலகம்

‘சீனா வைரஸ்’ எதிரொலி: அமெரிக்க பத்திரிகையாளர்கள் பலர் வெளியேற்றம்: சீனா அதிரடி

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொடர்பாக சீனாவும் அமெரிக்காவும் ஒருவரையொருவர் சிறுபிள்ளைத்தனமாக சண்டையிட்டு வரும் நிலையில் அதிபர் ட்ரம்ப் ‘சீனா வைரஸ்’ என்று கூறியது எரியும் நெருப்பில் எண்ணை வார்த்தது போல் மேலும் சிக்கலாகியுள்ளது.

சீனாவில் பணியாற்றும் அமெரிக்கப் பத்திரிகையாளர்களை உடனடியாக வெளியேறுமாறு சீனா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், வால்ஸ்ட்ரீட் ஜர்னல், ஆகிய பத்திரிகைளின் நிருபர்கள் உடனடியாக சீனாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள சீன அரசு ஊடகங்கள் சார்பிலான பத்திரிகையாளர்கள் எண்ணிக்கைக்கு அமெரிக்கா முட்டுக்கட்டைப்போட்டதையடுத்து பதிலடியாக இந்த நடவடிக்கையை சீனா எடுத்துள்ளதாக அதன் அயலுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பத்திரிகைகளில் பணியாற்றும் நிருபர்கள் 4 நாட்களுக்குள் சீன வெளியுறவு அமைச்சகத்துக்கு தங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்கவும் 10 நாட்களில் தங்கள் சீன அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் மட்டுமல்லாமல் ஹாங்காங், மக்காவ் உள்ளிட்ட இடங்களிலும் இவர்கள் பணியாற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சீனாவுக்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டால் அதே பாணியில் பதிலடி கொடுப்போம், சீனா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று சீன வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

சீனாவின் இந்த முடிவைக் கண்டித்த அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ, “இது துரதிர்ஷ்டவசமானது, சீனா தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT