உலகை அச்சுறுத்தி வெகு வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றை அமெரிக்க அதிபர் ‘சைனீஸ் வைரஸ்’ என்று வர்ணித்ததை சீனா தங்களை அமெரிக்கா அவமானப்படுத்துகிறது என்று கண்டித்தது.
வூஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் உருவானதாகக் கருதப்படும் இந்த வைரஸ் ஒரு புரியாத புதிராக மாறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீனா வெகுவாக முயன்று போர்க்கால கட்டுப்பாடுகளுடன் போராடி வைரஸ் பாதிப்பை குறைத்துள்ள நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா உட்பட கிழக்கு ஆப்பிரிக்க நாட்டுக்கும் வைரஸ் பரவியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த வைரஸை ‘சைனீஸ் வைரஸ்’ என்று வர்ணித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு வந்த போதும் தொடர்ந்து தான் கூறியது சரியே என்று ட்ரம்ப் பிடிவாதமாகப் பேசியுள்ளார், செய்தியாளர்களை சந்தித்த அவர் "இது சீனாவிலிருந்து தான் வருகிறது, அதனால் மிகவும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க ராணுவம் மூலம்தான் சீனாவில் கோவிட்-19 பரவியது என்று சீனா பொய்யான தகவலை பரப்பி வருவதற்குப் பதிலடியாகத்தான் இப்படி கூற வேண்டியுள்ளது என்றும் தன் கருத்தை நியாயப்படுத்தினார் ட்ரம்ப்.
"சீனா தவறான தகவலைப் பரப்புகிறது, அமெரிக்க ராணுவம்தான் கரோனா தொற்றை சீனாவுக்கு கொடுத்தது என்ற கருத்தை நான் எப்படி ஏற்க முடியும்? நம் ராணுவம் யாருக்கும் கரோனாவை கொடுக்கவில்லை” என்றார்.