உலகம்

கரோனா வைரஸால் முடக்கப்பட்ட இத்தாலி: உற்சாகம் ஏற்படுத்த பால்கனியில் பாடும் மக்கள்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் காரணமாக இத்தாலி நாட்டின் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வீடுகளில் அடைபட்டுள்ள மக்கள் தங்களது மன இறுக்க நிலையைத் தவிர்ப்பதற்காக பாடல்களைப் பாடி வருகின்றனர்.

இத்தாலியில் கரோனா வைரஸ் பாதிப்பால் 1,200க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 17,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து இத்தாலியில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், நாடக அரங்குகள் ஆகியவற்றை ஏப்ரல் 3-ம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல் திருமணங்களை நடத்தவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரோம் நகரில் உள்ள அனைத்து தேவாலயங்களும் மூடப்பட்டன. இதனால் இத்தாலி நகரமே முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இத்தாலியில் உள்ள சியனா, நேபிள்ஸ், போன்ற பகுதிகளில் வீடுகளில் அடைபட்டுள்ள மக்கள் மன இறுக்கத்தைத் தவிர்ப்பதற்காக பால்கனியில் நின்று கொண்டு இத்தாலியின் பாரம்பரியப் பாடல்களை ஆடியும்,
பாடியும் வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நெருக்கடியான நிலையிலும் இத்தாலியர்கள் மகிழ்ச்சியான மனநிலையுடன் இருப்பதை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமான உயிரிழப்பை இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் சந்தித்துள்ளன.

SCROLL FOR NEXT