இங்கிலாந்தில் பிறந்த ஒரு குழந்தை கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இளவயது நபராக அக்குழந்தை அடையாளப்படுத்தப்படுகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், வியாழக்கிழமை சுவாசப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பிரசவத்திற்குப் பிறகுதான் அவருக்கு கோவிட்-19 காய்ச்சல் இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. குழந்தைக்கும் கோவிட் 19 காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதில் குழந்தையை விட தாயின் உடல் நிலை மோசமடைந்து இருப்பதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு நார்த் மிடில் செக்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் கோவிட்-19 காய்ச்சலுக்கு 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யுகேவில் சுமார் 700க்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கோவிட் -19 காய்ச்சலுக்கு 1,40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,000 பேர் வரை பலியாகியுள்ளனர்.
சீனாவில் கோவிட் -19 காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 3,136 பேர் பலியாகியுள்ளனர். 80,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவிலிருந்து பரவிய கோவிட் -19 காய்ச்சல் உலகம் முழுவதும் 112 நாடுகளில் பரவியுள்ளது.