பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோவுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோ கடந்த 7-ம் தேதி அமெரிக்கா சென்றார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பால்ம் பீச் நகரில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை அவர் சந்தித்துப் பேசினார்.
பிரேசில் அதிபருடன் அவரது தகவல் தொடர்புச் செயலாளர் பாபியோ வாஜ்கார்டனும் அமெரிக்கா சென்றிருந்தார்.
பிரேசில் திரும்பிய பாபியோவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவரது ரத்த மாதிரியைப் பரிசோதனை செய்தபோது அவருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரேசில் அதிபர் ஜேர் போல்சினோராவுக்கு கோவிட் -19 காய்ச்சல் தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவர் பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனை முடிவில் ஜேர் போல்சோனரோவுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜேர் போல்சோனரோ உடல் நலம் சார்ந்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரேசில் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.