பில் கேட்ஸ் 
உலகம்

மைக்ரோசாப்டிலிருந்து பில் கேட்ஸ் விலகல்

பிடிஐ

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலிருந்து இணை நிறுவனர் பில் கேட்ஸ் விலகியுள்ளார். பொதுச்சேவைக்கு அதிக நேரம் ஒதுக்கப்போவதாக அவர் அறிவித்தார்.

கணினித் தொழில்நுட்பத்தின் வரலாற்று முகம் என்று வர்ணிக்கப்படும் 64 வயதான பில் கேட்ஸ், தனது நண்பருடன் இணைந்து உருவாக்கிய மைக்ரோசாப்ட்ஸ் நிறுவனத்திலிருந்து விலகியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இனி பொதுச் சேவைகளில் ஈடுபடப் போகிறேன் என்று பில் கேட்ஸ் சொன்னாலும், அவர் ஏற்கெனவே தனது மனைவியுடன் இணைந்து நடத்திவரும் அறக்கட்டளையில் முழுக் கவனத்தையும் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இது மென்பொருள் உலகின் பொறியாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

பில் கேட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி என்ற உச்ச நிலையிலிருந்து ஒரு படி இறங்கி, நிர்வாக இயக்குநர் குழுவில் ஒருவராகவே பல ஆண்டுகள் பணியாற்றி வந்தார். அவ்வப்போது பொறுப்புகளிலிருந்து விலகுவது இது புதிது அல்ல என்றாலும் அவர் முழுவதுமாக கணினி உலகிலிருந்து இம்முறை விலகியுள்ளார் என்பதுதான் பலரது வியப்பிற்கும் காரணம்.

''பில் கேட்ஸின் அன்புக்கு நான் நன்றியுடையவனாக இருப்பேன்'' என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாகி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.

சத்யா நாதெல்லா அறிக்கை

இதுகுறித்து மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகியும் நிறுவனத்தின் மூத்தவருமான சத்யா நாதெள்ளா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''நிறுவனத்துடன் பல ஆண்டுகளாக பில் கேட்ஸுடன் இணைந்து பணியாற்றியதும் அவரிடம் கற்றுக்கொண்டதும் மிகப்பெரிய மரியாதையும் பாக்கியமும் ஆகும்.

மென்பொருளின் ஜனநாயக சக்தியின் மீதான நம்பிக்கையுடனும், சமூகத்தின் மிக முக்கியமான சவால்களைத் தீர்ப்பதற்கான ஆர்வத்துடனும் பில்கேட்ஸ் எங்கள் நிறுவனத்தைத் தொடங்கினார். மைக்ரோசாப்ட்டும் உலகமும் இதற்குச் சிறந்ததாக அமைந்தன. அவர் நிறுவனத்தின் மிகப்பெரிய பொறுப்பிலிருந்து விலகினாலும் தொழில்நுட்ப ஆலோசகராக தனது தொடர்ச்சியான பங்களிப்பை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வழங்குவார்.

"பில் கேட்ஸின் நட்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவருடன் தொடர்ந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன்''.

இவ்வாறு சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.

கணினித் தொழில்நுட்பத்தின் வரலாற்று முகம்

பில் கேட்ஸ் விலகல் குறித்து வெட்பஷ் ஆய்வாளர் டேனியல் இவ்ஸ் முதலீட்டாளர்களுக்கு எழுதிய குறிப்பில் கூறுகையில், "கடந்த பத்தாண்டுகளில் பில் கேட்ஸ் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற தொண்டு நிறுவனங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால் இந்த நடவடிக்கை ஆச்சரியமானதல்ல.

கேட்ஸ் தொழில்நுட்ப உலகில் ஒரு வரலாற்று நபராக இருக்கிறார். மைக்ரோசாப்ட், பல பத்தாண்டுகளுக்கு அவர் பெயரைத்தான் சொல்லிக்கொண்டிருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT