அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி 
உலகம்

தீவிரமாகப் பரவும் கரோனா : அமெரிக்காவில் தேசிய அவசர நிலை: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

பிடிஐ

அமெரிக்காவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து, அங்கு தேசிய அவசர நிலையை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த 5000 கோடி டாலர் நிதியைச் செலவு செய்யவும் அவர் அனுமதியளித்துள்ளார்.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில், அதிபர் ட்ர்ம்ப் ரோஸ் கார்டன் இல்லத்தில் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''கரோனா வைரஸுக்கு எதிராக அமெரிக்க மக்கள் தீவிரமாகப் போராடி வருகிறார்கள். அமெரிக்க மக்கள் தங்கள் அன்றாட பழக்கத்தில் சில தியாகங்களைச் செய்து, சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மோசமான சூழல் உருவாகும். அடுத்த 8 வாரங்கள் மிகவும் இக்கட்டானவை.

கரோனா வைரஸுக்கு இதுவரை அமெரிக்காவில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் 46 மாநிலங்களுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது. 2 ஆயிரம் பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆதலால், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசுக்கு முழுமையான அதிகாரத்தை வழங்குகிறேன். அமெரிக்காவில் தேசிய அவசர நிலையை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன். 5000 கோடி டாலர்களை கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பயன்படுத்த அனுமதிக்கிறேன்.

ஒவ்வொரு மாநில அரசும் உடனடியாக அவசர நிலை கட்டுப்பாட்டு அறையை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையும், அவசர நிலை சிகிச்சை அறையை உருவாக்கி மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும்.

தேசிய அவசர நிலையை அறிவித்திருப்பதன் மூலம் மக்களுக்கும், நோயாளிகளுக்கும் தேவையான உதவிகளை மருத்துவர்களும், மருத்துவமனைகளும், அதிகாரிகளும் தேவைப்படும் நேரத்தில் சென்று உதவி செய்ய வேண்டும். மக்களுக்கு உதவி செய்யத் தடையாக இருக்கும் அனைத்தையும் நாம் நீக்க வேண்டும்.

வைரஸ் பரிசோதனைக்காக தனியார் நிறுவனங்களையும் கூட்டாக அரசு சேர்த்துக் கொள்ளலாம். பரிசோதனை செய்ய விரும்பும் நபர் யாராக இருந்தாலும் பாதுகாப்பாக, வேகமாக, வசதியான முறையில் பரிசோதனை இருக்க வேண்டும். அனைவரும் சோதனை செய்யவேண்டும் என்பதால், உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை, அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்யலாம்.

அடுத்த வாரத்தில் 50 ஆயிரம் பேருக்கு கூடுதலாக பரிசோதனை செய்யும் வசதிகள் உருவாக்கப்படும் என்று நம்புகிறேன். மிகவும் முக்கியமான இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அங்கு பரிசோதனை மையங்கள் அமைக்க மருந்து நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளுடன் ஆலோசித்து வருகிறேன்.

தனிநபர்கள் யாரும் தங்கள் காரிலிருந்து இறங்காமலே தங்கள் ரத்தப் பரிசோதனையைச் செய்யும் வசதிகளைக் கொண்டுவர வேண்டாம் என்பதுதான் எனது நோக்கம்.

மாணவர்கள் தங்கள் கல்விக்காகக் கடன் வாங்கியவர்கள் அனைவருக்கும் வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை அது தொடரும்''.

இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT