சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இராக்கைச் சேர்ந்த 26 போராளிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து போர் கண்காணிப்புக் குழு கூறும்போது, “கிழக்கு சிரியாவில் இராக்கைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஹாஷித் அல் ஷாபி அமைப்பின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அந்த அமைப்பைச் சேர்ந்த 26 போராளிகள் கொல்லப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த வான்வழித் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்று உறுதியாகத் தெரியவில்லை.
இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக அல்பு கமல் நகருக்கு அருகில் வடக்கு பாக்தாத்தில் உள்ள ராணுவத் தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்கள் கடந்த மாதம் பேரணி சென்றனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரகம் மற்றும் அங்குள்ள அமெரிக்க விமானத் தளம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டது.
தொடர்ந்து இராக்கில் அமெரிக்கத் துருப்புகள் உள்ள இடங்களில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
ஜனவரி மாதத் தொடக்கத்தில் இராக்கில், ஈரான் புரட்சிப் படையின் தளபதி சுலைமான் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டார் . இதில் இராக்கில் உள்ள அவரது ஆதரவாளர்கள் அமெரிக்காவின் மீதும் அதன் படைகள் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.