ஈரானை சேர்ந்த தொழிலதிபர், ஒருவர் வங்கி ஒன்றிற்கு 2.6 கோடி டாலர் நிதி மோசடி செய்ததை அடுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈரானை சேர்ந்த ரேசா க்வாரி, மெல்லி என்ற தனியார் வங்கியின் மேலாளராக பணிபுரிந்தார். அவரது பதவி காலத்தின்போது 2.6 கோடி டாலர் நிதியை போலி ஆவணங்களை கொண்டு கடனாக பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த வங்கியின் இயக்குநர் மஹாபரீத் அமிர் நீதிமன்றத்தை நாடியபோது, ரேசா க்வாரி ஈரானிலிருந்து தப்பித்து கனடாவில் தலைமறைவானார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், இந்த மோசடிக்கு வங்கியில் பணிபுரிந்த 4 பேர் உடந்தையாக இருந்தது, மோசடி நிதி மூலம் 35 நிறுவனங்கள் பங்குகளை ரேசா வாங்கி, அதன் மூலம் பலனடைந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் எதிர்த்தரப்பு ஆதாரங்களை கொண்டு ஈரான் நீதிமன்றம் இந்த வழக்கில் தனது இறுதி விசாரணையை மேற்கொண்டது. இந்த வழக்கு மீதான தீர்ப்பில் ரேசா க்வாரியுடன் 4 பேருக்கு மரண தண்டனையும், இருவருக்கு வாழ் நாள் சிறை தண்டனையும் அளித்து ஈரான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் இறுதியாக இணக்கப்பட்ட 39 குற்றவாளிகளுக்கு தலா 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.