ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவியேற்பு நிகழ்வின்போது குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ஊடகங்கள், “ ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அந்நாட்டின் அதிபராக அஷ்ரப் கானி இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றார். அப்போது பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு வெளியே பலத்த குண்டுவெடிப்பு சத்தங்கள் எழுந்தன. குண்டு சத்தத்தைக் கேட்டு கூட்டத்தினர் களையத் தொடங்க, அஷ்ரப் கானியோ தொடர்ந்து அதிபராக உறுதி மொழி ஏற்றுக் கொண்டிருந்தார்” என்றார்.
இந்த நிலையில் குண்டுவெடிப்புகளுக்கு இடையே உறுதிமொழி ஏற்றது குறித்து அஷ்ரப் கானி கூறும்போது, “நான் புல்லட் புரூஃப் அணிந்திருக்கவில்லை. சட்டை மட்டுமே அணிந்திருக்கிறேன். நான் என் உயிரை இழக்க நேர்ந்தாலும் இங்குதான் இருப்பேன்” என்று தெரிவித்தார்.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை சமீபத்தில் தோஹாவில் கையொப்பமானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, கடந்த 18 ஆண்டுகளாக இரு தரப்பினருக்கும் இடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது. அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைப் பிரிவுகளை முழுமையாக விலக்கிக் கொள்ளும்.
கடந்த 18 ஆண்டுகாலப் போருக்காக இதுவரை அமெரிக்கா ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களைச் செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.