கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 9 நாடுகளுக்கு விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை நிறுத்தியது சவுதி அரேபியா.
உலக நாடுகளை கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸுக்கு இதுவரை உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் மட்டும் தீவிரமடைந்திருந்த கரோனா வைரஸ் தற்போது வளைகுடா நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் அச்சமடைந்த கத்தார் அரசு இந்தியா உள்பட 13 நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் நாட்டுக்குள் வரத் தடை விதித்துள்ளது.
இந்த சூழலில் சவுதி அரேபியா அரசு 9 நாடுகளுக்கு விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்தைத் தடை செய்துள்ளது. குறிப்பாக பஹ்ரைன், எகிப்து, ஈராக், இத்தாலி, குவைத், லெபனான், தென் கொரியா, சிரியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு விமானப் போக்குவரத்தையும், கடல்வழிப் போக்குவரத்தையும் ரத்து செய்துள்ளது. இந்த நாடுகளைச் சுற்றியுள்ள எல்லையையும் சீல் வைத்து மூடியுள்ளது.
இது குறித்து சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "எங்கள் நாட்டு மக்களின் உடல்நலம் கருதியும், உயிர் காக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். இந்தத் தடை தற்காலிகமானதுதான்" எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய புனிதத் தலங்களுக்கு மக்கள் வருவதைக் கட்டுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு நாடுகளில் இதுவரை 7 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஈரானில் 194 பேர் இறந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.