வங்கதேசத்தில் கரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, வரும் 17-ம் தேதி முஜிப்பூர் ரஹ்மான் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை ஒத்திவைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
வங்கதேசத்தில் 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
தெற்காசியாவில் இந்தியாவில் 41 பேர், பாகிஸ்தானில் 7 பேர், மாலதீவுகளில் 2 பேர், நேபாளம், பூட்டான், இலங்கையில் தலா ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வங்கதேசம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கொண்டாட்டத்தைத் தள்ளி வைத்துள்ளது.
வங்கதேசம் நாடு உதயமான பின் அந்நாட்டின் முதல் அதிபராக இருந்தவர் முஜிப்பூர் ரஹ்மான். அதன்பின் அவர், அந்நாட்டின் பிரதமராக கடந்த 1971-ம் ஆண்டு முதல் 1975-ம் ஆண்டுவரை இருந்தார். அதன்பின் கொல்லப்பட்டார்.
முன்னாள் பிரதமர் முஜிப்பூர் ரஹ்மான் நூற்றாண்டு விழாவை வரும் 17-ம் தேதி நடத்த வங்கதேச அரசு திட்டமிட்டு இருந்தது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடியும் அங்கு செல்ல பயணத் திட்டம் வைத்திருந்தார்.
ஆனால், சமீபகாலமாக கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதால், வங்கதேசம் செல்லலாமா என்பது குறித்து பிரதமர் மோடி முடிவு செய்யாமல் இருந்தார். பெரும்பாலும் அந்நாட்டுக்குச் செல்வதை பிரதமர் மோடி தவிர்ப்பார் என்று தகவல்கள் தெரிவித்தன.
இந்த சூழலில் வங்கதேசத்தில் முஜிப் நூற்றாண்டு நிகழ்ச்சியும் தற்போது ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால், பிரதமர் மோடி பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது.
இதுகுறித்து வங்கதேசத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் நிருபர்களிடம் கூறுகையில், " உலக அளவில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, வரும் 17-ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்த முஜிப் நூற்றாண்டு நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கு முறைப்படி நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது தெரிவிக்கப்பட்டு, புதிய தேதியும் அழைப்பும் அனுப்பப்படும்.
ஆனால் மீண்டும் எப்போது நிகழ்ச்சி நடத்தப்படும், எந்தத் தேதியில் நடத்தப்படும் என்பது குறித்து எந்தவிதமான முடிவும் இன்னும் வங்கதேச அரசு எடுக்கவில்லை " எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, நேபாள அதிபர் பிந்தியா தேவி பண்டாரி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.