ஈரானில் கரோனா வைரஸுக்கு இன்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் எனப்படும் கரோனா வைரஸ் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 பரவியுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பலி எண்ணிக்கை 3,042 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமான காய்ச்சலால் தென் கொரியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஈரான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்நாட்டில் உள்ள 31 மாகாணங்களிலும் ஏப்ரல் மாதம் முடிய அனைத்து பள்ளி, கல்லூகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே சமூக, மத, விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் ஈரானில் கரோன வைரஸுக்கு இன்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை ஒரே நாளில் உயிரிழந்த எண்ணிக்கை இதுவே அதிகமாகும்.
இதையடுத்து கரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி இன்று ஒரு நாளில் மட்டும் 743 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.