கடந்த டிசம்பரில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வூஹானில் தோன்றிய கொலைகார கரோனா வைரஸ் எனும் கோவிட்-19 உலகையே ஆட்டிப்படைக்கிறது. இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
ஆங்காங்கே விமான நிலையங்களில் இந்தியாவில் சோதனைகளுக்குப் பிறகே அயல்நாட்டினர் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர், ஆனால் எந்த நிலையிலும் சமூக ஊடகங்கள் என்ற வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் தப்பும்தவறுமான செய்திகளை, கருத்துக்களை பரவ விடுவது மட்டும் ஓய்வதில்லை.
அதில் ஒன்றுதான் ஆல்கஹால் அருந்தினால் அது கரோனாவிலிருந்து நம்மைத் தடுக்கும் என்ற ஒரு அறிவீனமான வதந்தி. ஆல்கஹால் கரோனா தொற்றத் தடுக்குமா? என்றால் உலகச் சுகாதார அமைப்புக் கூறும் பதில் “இல்லை” என்பதே.
ஒருமுறை கரோனா வைரஸ் உடலுக்குள் நுழைந்து விட்டால் நம் உடலில் ஆல்கஹாலை தெளித்துக் கொள்வது அல்லது ஆல்கஹாலை அருந்துவது ஒரு போதும் கரோனா வைரஸை அழித்து விடாது என்பதே உலக சுகாதார அமைப்பின் பதிலாகும். மாறாக ஆல்கஹாலை உடலில் தெளிப்பது போன்ற செயல்களால் சளிச்சவ்வு மேலும் பாதிப்படையவே செய்யும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.
ஆல்கஹால், குளோரின் போன்ற கிருமி நாசினி, தொற்று அகற்ற ரசாயனங்களை முறையான பரிந்துரைகளின் அடிப்படையில் தரை போன்ற இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள பயன்படுத்தலாம்.
எனவே சமூக ஊடகங்களில் விவரமறியாதவர்கள் சிலர் ஆல்கஹால் அருந்துவது, பீர் சாப்பிடுவது கரோனாவைத் தடுக்கும் என்று பரப்புவது தவறான தகவலாகும்.
கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க உலக சுகாதார அமைப்பின் பரிந்துரை என்னவெனில் ஹேண்ட் சானிடைஸர் மூலம், அதாவது இதில் 60% ஆல்கஹால் உள்ளடக்கம் உள்ளது, இதன் மூலம் கைகளை சுத்தமாகக் கழுவி வைத்திருப்பதே. கையை கழுவாமல் முகத்தைத் தொடுவதையும் தவிர்க்க வேண்டும் என்பது உலகச் சுகாதார அமைப்பின் பரிந்துரைகளாகும்.