உலகம்

கரோனா பாதிப்பு: தங்கள் நாட்டுக் குடிமக்களை அழைத்து வர ஈரானுடன் இந்தியா பேச்சுவார்த்தை 

செய்திப்பிரிவு

ஈரானில் உள்ள தங்கள் குடிமக்களை தங்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து அந்நாட்டு அரசாங்கத்துடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதுகுறித்து மூத்த இந்திய அதிகாரிகள் தரப்பில், “ஈரானில் உள்ள இந்தியர்களைச் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 300 பேர் தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானும் ஒன்று. கரோனா வைரஸுக்கு ஈரானில் இதுவரை நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

ஈரானின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், ஈரானின் துணை அதிபர் மவுசமெக் எம்தெகர் கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை ஈரான் அரசு சில நாட்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தியது.

மேலும், ஈரானில் கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT